சங்ககாலத்துக்குப் பிறகு வந்த அப்பர் பெருமான் திருநல்லூரை தம் சிரசுச் சிகரத்தில் சூடி மகிழ்ந்த விஷயம் நெகிழ்ச்சுக்குரியது. திருநாவுக்கரசர் தன் நடை தளரும் வயதிலும் உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார். திருச்சத்தி முற்றம் அடைந்து கொழுந்துச் சிவந்திருக்கும் ஈசனைக் கண்டு கண்ணீர் சொரிந்தார். ‘‘கொன்றை சூடிய வேந்தன் தம் நனைந்த திருவடிகளை தேவர்கள் தலையில் வைத்தீராமே!’’ என ஈசனை நோக்கி நெக்குருகினார். அந்த பாக்கியம் எமக்குக் கிடையாதா என ஏக்கமாய்க் கேட்டார். அந்நேரம் அசரீரியாய் ‘நல்லூர் வருவாயாக, விரைவாய் வருவாயாக’ என ஒருமுறைக்கு இருமுறை கட்டியம் கூறுவதுபோல் பகர்ந்தார் ஈசன். திருநல்லூர் திக்கு நோக்கி விரைந்தார். திருநல்லூர் நாயகன் கல்யாணசுந்தரேஸ் வரரின் முன்பு களிப்பெய்தி அமர்ந்தார். சிறு குழந்தைபோல் தரையில் தவழ்ந்துபோய் கண்ணீரோடு ஈசனைப் பார்த்தார். ‘‘கூற்றம் எனும் எமன் வந்து குலைக்கும் முன் பெருமானே உம் பூவடிகளை என் தலைமீது பொறிக்க மாட்டீரா’’ என கேவல் பொங்க அழுதார்.
நல்லூர் பெருமான் கனிந்தார். உமையன்னையும் உடன் அமர்ந்தாள். சட்டென்று ஈசன் லிங்கத்தினின்று ஜோதியாய் கிளர்ந்தெழுந்தான். வீரக்கழல் அணிந்த ஈசனின் திருவடி ஜோதியின் ஒளிபட்டுப் பிரகாசித்தது. நாவுக்கரசரின் முகம் ஒளிர்ந்தது. நெகிழ்ந்து கிடந்த அவர் தலைமேல் தம் திருவடிகளை மெல்ல இறைவன் பதிக்க பரவசத்தின் சிகரத்தைத் தொட்டார் அப்பர் பெருமான். புறவுலகின் நினைவை முற்றிலும் இழந்து அகத்தில் பொங்கி ஆர்ப்பரித்த ஈசனின் அருட் சமுத்திரத்தில் கரைந்தார். ஈசன் மெல்ல சுருங்கி லிங்கத்தினுள் ஒடுங்க, அகம் நிறைந்த நாவுக்கரசர் குழந்தைபோல தளர் நடை நடந்து சந்நதிக்கு அருகே அமர்ந்தார். உள்ளுக்குள் பெய்த அருட்பெருமழையை பாக்களாக மாற்றி திருப்பதிகங்களாக திருவாய் மலர்ந்தருளினார். ஒவ்வொரு பதிகத்திலும் ‘நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே’ என்று தம் சிரசில் ஈசன் சூடிய திருவடியை நினைந்து நினைந்து நெகிழ்கிறார்.
அதோடு விடவில்லை; நம்மீது கருணை கொண்டவரான அவர், ‘‘எம் தலையில் பதித்ததுபோல் உம்மை நாடிவரும் பக்தர் பெருமக்களின் தலையிலும் திருவடிபதிக்க வேண்டுகிறேன்’’ என வினயமாய் கேட்க ஈசனும் சரியென்று உகந்தான். இத்திருநல்லூர் நான்கு ராஜவீதிகளுடன் சப்தசாகரம் எனும் ஏழுகடல் தீர்த்தத்தோடு விளங்குகிறது. ஏழுநிலை மாடத்துடன் ராஜகோபுரம் வானளாவி உயர்ந்து நிற்கிறது. உட் கோபுரவாயிலுக்குள்ளே இடதுபுறம் அமர்நீதிநாயனாரும், கையில் மழலையுடன் அவர் துணைவியாரும் நல்லூர் பெருமானை வந்து தரிசிக்க வரும் பக்தர்களை வெகு பவ்யமாக வரவேற்கிறார்கள். சிவத்தொண்டர்களுக்கு ஆடை அளித்து, அவர்கள் பசியாற இன்னமுது படைப்பதையே தனது வாழ்க்கையாக்கிக் கொண்ட குடும்பம் அது. நல்லூர் பெருமானும் வேதியர் வடிவில் விளையாடல் புரிந்து தன்னோடு சேர்த்துக் கொண்டார் என்கிறது பெரிய புராணம். இத்தலத்திற்கு பெரும் பெருமை சேர்த்த இந்த திவ்ய தம்பதியை சிரம்தாழ்த்தி வணங்கி, உட்பிராகாரம் நோக்கி நகரலாம்.
அந்த செங்குத்தான மாடக்கோயில் படிகளில் ஏறும்போதே செங்கணானின் நினைவு நம் நெஞ்சில் நிழலாடும். கல்யாணசுந்தரேஸ்வரர் சந்நதியை நெருங்க சாந்நித்யம் நெஞ்சை நிறைக்கும். சுயம்புவாய் பொங்கிய லிங்கம், நம்மை சிலிர்த்திட வைக்கும். இன்றும் இந்த லிங்கத்தினுள் சப்தரிஷிகளும் பிரளயத்தின்போது ஒடுங்கிய ஏழு துளைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பிரபஞ்சத்தின் மாற்றத்திற்குக் காரணமாக இத்தல ஈசன் விளங்குவதால், லிங்கத்தின் நிறம் ஆறு நாழிகைக்கு ஒருமுறை மாறுவது பார்க்க மனம் சிலிர்க்கும். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அழகாய் நிறம் மாறும் அற்புதம் மனதைக் கொள்ளை கொள்ளும். காலைமுதல் தாமிரம், இளம் சிவப்பு, உருக்கிய தங்கம், கரும்பச்சை, இன்னதென்று சொல்லமுடியாத வண்ணம் என்று இரவுவரை தொடர்ச்சியாக நிறம் மாறிக்கொண்டே இருக்கும். அதனாலேயே பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். நாவுக்கரசர் ஈசனிடம் வேண்டிக்கொண்டது போல, இன்றும் பெருமாள் கோயிலில் சடாரி கொண்டு ஆசியளிப்பதுபோல, ஈசனின் திருவடிகளை பக்தர்களின் தலையில் பதித்து ஆசியளிப்பது இங்கு நிரந்தர வழக்கமாக உள்ளது.
சிவன் சந்நதிக்கு அருகிலேயே மலைமகளான கிரிசுந்தரி அருள் அமுதமாக நிற்கிறாள். உயர்ந்த திருவுருவம் கொண்டு, அருளைப் பொழிவதில் மேருவை விட உயர்ந்தவளாய் விளங்குகிறாள். நல்லூரின் புகழ்சொல்லும் இன்னொரு விஷயம், இத்தலத்து பிராகாரத்தில் அமைந்துள்ள நல்லூர் அஷ்டபுஜமாகாளி. பிரளயத்தோடு காளிக்கு நெருங்கிய தொடர்பிருப்பதால் இங்கு அமர்ந்துள்ளாள். காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இம்மாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகி. மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள். ஆக்ரோஷமே இல்லாது அமைதியாய் அமர்ந்திருப்பாள். ஆகவே, மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள். அவளின் இரு கைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகுபார்க்கிறார்கள்.
அதுமட்டுமல்லாது, கல்யாண சுந்தரேஸ்வரர் அருளால் திருமணமான தம்பதிகள் ‘குழந்தைச் செல்வம் தா தாயே’ என்று கைகூப்பி வேண்டுவதை இங்கு நித்தமும் காணலாம். குந்திதேவி சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி பூஜித்த லிங்கத்தை கோயிலின் உட்பிராகாரத்தில் காணலாம். இரண்யனை வதம் முடிக்கும் முன்பு, எவ்வுருவம் தாங்கி சம்ஹாரம் செய்வது என்று இத்தலத்து ஈசனிடம் வினவ நரசிங்கனாக செல் என்று ஆசி கூறினாராம். அதற்கு ஆதாரமாக கருவறை விமானத்தின் பின்புறம் நரசிம்மமாகக் காட்சி அளிக்கும் சிற்பம் இத்தலத்து அற்புதம். மேலும், மேலும் நூறாயிரம் விஷயங்களைக் கொட்டும் கோயில் இது. இப்பெருங்கோயில் கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தரபெருமாள்கோயில் எனும் ஊருக்கு அருகே உள்ளது. நல்லூர் செல்வோம், நல்வாழ்வு பெற்றிடுவோம்.
No comments:
Post a Comment