கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10 ம் அதிபதி புதன் பகவானாவார். லக்னாதிபதி புதன் பகவானே ஜீவனாதிபதியாகவும் இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். பொதுவாகவே,கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாளியாகவும் எதிலும் சிந்தித்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ஆட்சி உச்சம் பெற்று தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், சனி போன்றவர்களின் சேர்க்கை பெற்று, குரு போன்ற சுபகிரகங்களின் பார்வைப் பெற்றால் சமுதாயத்தில் சிறப்பான உயர் நிலையினைஅடைவார்கள். அதிகாரமிக்க பதவிகளை அடையக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். புதன் வலுப்பெறுவது மட்டுமின்றி உடன் செவ்வாய் சூரியன் சேர்க்கை உண்டானால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வான பதவிகளை அடைய கூடிய யோகம் அமையும். இத்துடன் சனியும் பலம் பெற்று அமைந்து விடுமாயின் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவிகள் ஜாதகரைத் தேடி வரும். இது மட்டுமின்றி புதன் கேந்திர திரிகோணங்களில் சூரியன் சேர்க்கை பெற்று சந்திரனும் பலமாகஅமைந்த குரு பார்வை செய்தாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் பொருளாதார மேன்மைகளும் பெற்று வாழ்வில் உயர்வு உண்டாகும்.
புதன் பகவான் சுக்கிரன், சனி போன்ற நட்பு கிரக சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் சொந்தத்தொழில் செய்யும் யோகம், வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் அற்புத நிலை உண்டாகும். புதனுடன் சுக்கிரன், சந்திரன் சேர்க்கை உண்டாகி 9,12ல் ராகு பகவான் அமையப் பெற்றால் ஜாதகர் கடல் கடந்து வெளிநாடு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
புதனுடன் சந்திரன் அமைந்து சுக்கிரனும் சேர்க்கை பெற்றால்,பயிர் தொழிலில் செய்யக்கூடிய அமைப்பு, புதனுடன் செவ்வாய் சேர்க்கைப் பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாய தொடர்புடைய பணிகள் அமையும். புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று வலுப்பெற்றிருந்தால் கலை, இலக்கியம், சங்கீத துறையில் புகழ் பெறும் அமைப்பு உண்டாகும்.
புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று, உடன் குரு பார்வையும் இருந்தால் பெண்கள் வழியிலும், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில்களிலும் சம்பாதிக்கக்கூடிய (பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் )வாய்ப்பு அமையும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர் துறையில் வல்லவராகத் திகழ்வார். புதன் தனித்து பலம் பெற்று குரு போன்ற சுபகிரகங்களின் பார்வை இருந்தால் ஆசிரியர் பணி,பதிப்பகம், பத்திரிகைத் தொழில், புத்தகம் வெளியிடும் பணி,வக்கீல் தொழில், வாக்கால் பேச்சால், முன்னேறக்கூடிய தொழில் போன்றவற்றில் அனுகூலங்கள் உண்டாகும். புதன் தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், சனி சேர்க்கை பெறுவதும், சுக்கிரன், சனிவீடுகளில் அமைவதும் கல்விக்கு சம்பந்தமில்லாத துறைகளில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
சனி, புதன் சேர்க்கை பெற்று வலு இழந்திருந்தால் அடிமைத்தொழில் அமைப்பு, சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். புதனுக்கு 7ல் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற பாவிகள் இருந்தால், எவ்வளவு திறமை இருந்தாலும் வாழ்வில் மேன்மை அடைய இடையூறுகள் உண்டாகும். அது போல புதனுக்கு இருபுறமும் பாவிகள் இருந்தாலும் வாழ்வில் முன்னேற்றம் உண்டாக தடை ஏற்படும். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் முடிந்தவரை கூட்டு சேர்ந்து தொழில் செய்வதை தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவதும், பிறரை சார்ந்து உத்தியோகம் செய்வதும் நல்லது.
No comments:
Post a Comment