சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சுக்கிர பகவானாவார். சுக்கிரன் சுக காரகன் என்பதால் அவர் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று தனக்கு நட்பு கிரகங்களான சனி, புதன் போன்றவர்களின் சேர்க்கையுடன், சுபர் பார்வையும் பெற்றிருந்தால் நல்ல நிலையான ஜீவனம் செய்துசம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு, அதன் மூலம் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு வாழக்கூடிய யோகம் உண்டாகும். அதிலும் இப்படி சேர்க்கைப் பெற்று பலம் பெற்ற புதன், சனி, சுக்கிரன் போன்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களில் சிறப்பான வருமானமும்,கூட்டுத் தொழில், சொந்த தொழில் செய்து சம்பாதித்து மிகப் பெரிய அளவில் செல்வந்தராகக்கூடிய அற்புதமான அமைப்பும் உண்டாகும்.
சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்று 9,12 ல் ராகு அமையப் பெற்றால் வெளியூர், வெளிநாடு சம்மந்தமுடைய தொழில்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். இதுமட்டுமின்றி சந்திரன் 10ல் உச்சம் பெற்று அமைந்திருந்தால், கடல் சார்ந்த பணிகளில் பணிபுரியும் அமைப்பு, ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவு வகைகள் சம்பந்தப்பட்ட தொழில், உணவகம் நடத்தும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்து பலமாக அமையப்பெற்றிருந்தால், மனை, பூமி, கட்டிடத்துறை, ரியல் எஸ்டேட் தொடர்புடைய தொடர்புடைய தொழில்களில் பணிபுரிய நேரிடும். சந்திரன் சேது சேர்க்கை பெற்றால் மருந்து, கெமிக்கல்,ரசாயன தொடர்புடைய தொழிலில் யோகம் உண்டாகும். சுக்கிர பகவான் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலமாக அமையப் பெற்று சனி, புதனுடன் இணைந்திருந்தால் சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகம் அமையும்.
சிம்ம லக்னத்திற்கு 10ம் அதிபதி சுக்கிரன் கலை காரகன் என்பதாலும், சுக்கிரனே 3ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கலை, இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். சுக்கிரன் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் ஆடை, ஆபரணங்கள்,பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்ட தொழிலில சம்பாதிக்க முடியும். சுக்கிரன் தன லாப அதிபதியான புதனின் சேர்க்கை பெற்றிருந்தால் மற்றவர்களை வழி நடத்தும் திறன், அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், கதை, கவிதை எழுதக்கூடிய கற்பனை ஆற்றல், சினிமாத் துறைகளில் உள்ள உட்பிரிவுகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். அதிலும்10ல் புதன் பலம் பெறும் போது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்திரிகைத் துறை, புத்தக பதிப்பு, சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் புதன், குருவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தால் ஆசிரியர் பணி,மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய பணி, தனது அறிவாற்றலால் முன்னேறும் வாய்ப்பு, பள்ளி கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
லக்னாதிபதி சூரியன் 10ம் வீட்டில் பலம் பெற்று செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, கௌரவமான பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் பலமாக அமைந்திருந்தால் நல்ல நிர்வாகியாக பணிபுரிந்து எந்தத் துறையில் செயல்பட்டாலும்,அதில் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக விளங்கமுடியும். சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு,அரசு சார்ந்த துறைகளில் நல்ல வேலை அமையும். 10 ல் சூரியன்,குரு சேர்க்கை பார்வையுடனிருந்தால் நல்ல வேலை அமைந்து அதன் மூலம் சம்பாதித்து வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் கூட்டுத் தொழிலில் சம்பாதிக்கும் அமைப்பு, வண்டி வாகனங்கள் மற்றும் டிராவல்ஸ் மூலம் சம்பாதிக்கும் அமைப்பு உண்டாகும். நல்ல வேலையாட்களும் கிடைக்கப்பெற்று அவர்களாலும் முன்னேற்றமான பலன்கள் அமையும்.
அதுவே சுக்கிரன் மறைவு ஸ்தானங்களிலிருந்தாலோ சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் இருந்தாலோ உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும். அதிலும் குறிப்பாக சுக்கிரன் பலமிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று பகை வீடுகளில் அமைந்தால் நிலையான ஜீவனம் இல்லாமல அடிமைத் தொழில் செய்யக்கூடிய அமைப்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
No comments:
Post a Comment